இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட் மிட்லன்ட்ஸ் பகுதியில் குஜராத்தி சங்கம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. ஏராளமான விருந்தினர்கள் பங்கேற்ற அந்த திருமண விருந்தில்  திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் திருமண விருந்து நடைபெற்ற இடத்திற்கு பின்புறம் நிறுத்தப்பட்ட காரின் மீது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையின் தலைமை ஆய்வாளர் கூறியதாவது, “இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருமண விருந்தில் பங்கேற்றவர்களிடம் நாங்கள் விசாரணை மேற்கொள்வது அவசியம். அவர்கள் ஏதேனும் பார்த்தார்களா அல்லது பதிவு செய்தார்களா என்பதை நாங்கள் உறுதி செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும். மக்கள் பாதுகாப்பாக உணர எங்கள் தரப்பில் இருந்து கூடுதல் ரோந்துகளை மேற்கொள்வோம்” என கூறியுள்ளார்.