மகாராஷ்டிரா மாநிலம் சோப்டா வட்டத்தில் நடைபெற்ற திருமண விழா சோகமாக முடிந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி கிரண் மாங்கிள் (50) தனது மகள் திரிப்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

இதனை தடுக்க முயன்ற திரிப்தியின் கணவர் அவினாஷும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜல்கான் மாவட்ட போலீசார் தெரிவித்ததாவது, தம்பதியர் திருமண நிகழ்ச்சியில் இருப்பதை அறிந்த கிரண் நேரடியாக திருமண மண்டபத்திற்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் கிரணை கட்டுப்படுத்தி தாக்கியுள்ளனர்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிரண் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிப்தி-அவினாஷ் தம்பதியர் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமானவர்கள் என்றும், தற்போது புணேவில் வாழ்ந்து வந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். கிரணின் செயலுக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.