
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் நிலையில் வருகிற 13-ஆம் தேதி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீபத்தை காண்பதற்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது பக்தர்கள் மேலே செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளார்.
அதாவது ஏற்கனவே திருவண்ணாமலை யில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை நேரம் என்பதால் ஈரப்பதம், மண் சரிவு மற்றும் பாறைகள் ஊருளும் அபாயம் இருப்பதால் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளார். மேலும் புவியியல் ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு சுமார் 300 பேர் மட்டுமே மலை ஏறலாம் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன் காரணமாக பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் போது மலையேறு அனுமதி கிடையாது என்று அமைச்சர் சேகர்பாபுவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும் தெரிவித்துள்ளனர்.