
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள முன்வந்தார். பீளமேடு பகுதியில் தங்கி, தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருவதாக கூறிய அந்த பெண்ணுடன், மாணவர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 10ம் தேதி இரவு, அந்த பெண் தனது நண்பரிடம் கோவை நோக்கி வருகிறேன், உடனடியாக சந்திக்க வேண்டும் எனக் கூறினார். இதனை நம்பி, மாணவர் தனது பைக்கில் சூலூருக்கு வந்தார். ஆனால், குறுகிய சாலை வழியாக ஓர் பிரபல பிரியாணி கடைக்குப் பின்னால் செல்லுமாறு கூறிய பெண், மாணவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த 4 மர்ம நபர்கள், மாணவரை பயங்கரமாக தாக்கி, அவரின் 2 பவுன் செயினை பறித்து, பின்னர் காரணம்பேட்டை அருகே அவரை வீசி எறிந்து தப்பிச் சென்றனர். இதில், மாணவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தந்தைக்கு உடனடியாக தகவல் வழங்கிய மாணவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவரை தாக்கிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நட்பாகி மோசமாக ஏமாற்றும் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.