தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது பிரபாகரன் மிகுந்த அன்பு மற்றும் காதல் வைத்துள்ளார். இந்நிலையில் ஆஷாவின் நடத்தையில் திடீரென பிரபாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு  ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அரிவாளால் தன் மனைவியின் கழுத்தை வெட்டி பிரபாகரன் கொலை செய்தார். பின்னர் மனைவி இறந்த துக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரபாகரன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை அவர்களுடைய மகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தான். மேலும் இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.