
தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதியில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, கஞ்சா விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாளமுத்துநகர் காமராஜர்நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேக படும்படியான வகையில் ஒரு நபர் சுற்றித் திரிந்தார். உடனடியாக அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் கோவில்பிச்சை மகன் செல்வேந்திரன் (57) என்பதும், நீண்ட நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் செல்வேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், தாளமுத்துநகர் போலீசார் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.