
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பாலியல் தொல்லைகள் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் தொடர்பாக வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.
இது தொடர்பாக தற்போது நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போன்று தெலுங்கு திரையுலகிலும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என தெலுங்கானா அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தெலுங்கு திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் அத்துமீறல்கள் இருப்பதால்தான் நடிகை சமந்தா இப்படி ஒரு கோரிக்கையை எடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.