தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை. அது சமூக நீதி மற்றும் சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். ஹிந்தியை திணிக்கவில்லை என்று கூறிக் கொண்டே அதற்கான எல்லாம் முயற்சியையும் எடுத்து வருகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையையும் மொழி வழி பண்பாடுகளையும் சிதைத்து ஒற்றுமையை குலைப்பவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள்.

தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க திமுக ஒரு போராட்டத்தை கையில் எடுத்தால் அதனை பார்த்து மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். அலறுகிறார்கள் அதோடு நம்மை தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹிந்தியையும் தமிழைப் போன்று  ஒரு மொழி தானே அதனை கற்றுக் கொள்ளக் கூடாதா என்று கரிசனத்துடன் பேசுபவர்களிடம் சென்று சமஸ்கிருதத்திற்கு பதிலாக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள். தமிழும் செம்மையான மொழி தானே என்று கேட்டுப்பாருங்கள். அப்போது அவர்களின் உண்மையான நோக்கமும் முகமும் அம்பலமாகிவிடும். மேலும் அதனால் தான் ஹிந்தியை திணிப்பதை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.