
கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர் எஸ் புரம் பகுதியில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதற்கு முன்பு கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் அவர்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கூட்டணியில் இல்லை என்று எல்லாம் நாங்கள் பார்ப்பது கிடையாது. அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கின்றதா என்று பார்த்து தான் மத்திய அரசு பாதுகாப்பு வழங்குகின்றது.
ஆனால் விஜய்க்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிந்தும் மாநில அரசு அவருக்கான பாதுகாப்பை வழங்கவில்லை. ஆளுநருக்கு முதல்வருக்கும் இருக்கும் பிரச்சனை வேறு. ஆனால் இதில் முதல்வர் ஏன் என்னை இழுக்கின்றார். கீழே விழுந்து தலையில் அடிபட்டால் தான் சிலருக்கு புத்தி வரும் என முதல்வர் கூறியதை பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. இதனை நாம் தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம். திமுகவில் இருக்கின்ற அமைச்சர்கள் பெரும்பாலானோர் அதிமுகவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சுகாதாரம் என்பது தரமானதாக கிடையாது. நடிகர் கஞ்சா கருப்பை அமைச்சர் சுப்பிரமணியம் மிரட்டியுள்ளார். கஞ்சா கருப்பு கூறியது பொய் என்பதை நிரூபிக்க ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்துவோம். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மையினர் நிச்சயமாக திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நன்றாகவே தெரியும். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விவாதத்திற்கு தேதியும் நேரத்தையும் குறித்தால் விவாதத்திற்கு வர நான் தயாராக இருக்கின்றேன் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.