விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இதனை அறிந்த குடும்பத்தினர் உறவு முறையில் நீங்கள் இருவரும் அண்ணன் தங்கை என கூறியுள்ளனர். இதனால் ஜெயசூர்யா ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

ஆனால் ரம்யா தனது கைகளை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டும் புகைப்படங்களை ஜெயசூர்யாவுக்கு அனுப்பி என்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஜெயசூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரம்யா அங்கு சென்றார். அங்கு ஜெயசூர்யாவிடம் பாசமாக பேசி தேநீர் போட்டு தருகிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து தான் கொண்டு வந்த எலி பேஸ்ட்டை தேநீரில் கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்துள்ளார். அவரும் தேநீரை குடித்துவிட்டார்.

இதனை தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு வாட்ஸ் அப் சாட்டிங் மூலம் பேசிய ரம்யா ஜெயசூர்யாவிடம் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதற்கு ஜெயசூர்யா ஆமாம் என கூறியுள்ளார். உடனே ரம்யா நான் தான் தேநீரில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்தேன் எனக் கூறியுள்ளார். மேலும் உன்னால் முடிந்தால் உயிரை காப்பாற்றிக்கொள் எனக் கூறியதாக தெரிகிறது. நள்ளிரவு நேரம் ஜெயசூர்யாவின் உடல்நலம் மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக ஜெயசூர்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவ்வளவு நடந்த பிறகும் ஜெயசூர்யா ரம்யாவை காட்டி கொடுக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். ஒருநாள் ஜெயசூர்யாவின் தொலைபேசியை பெற்றோர் சோதனை செய்தபோது ரம்யாவின் வாட்ஸ் அப் சேட்டிங்கை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே ரம்யாவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.