
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் அதிமுக எம்எல்ஏக்களுடன் சேராமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால் செங்கோட்டையனிடம் கேளுங்கள் என்றார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துகள் அவருக்கு அதிமுகவில் இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறியதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நான் எதுவுமே செய்யப்போவது கிடையாது. எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்த பாதையில் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் பாதை தெளிவாக இருக்கும் நிலையில் என்னுடைய லட்சியமும் உயர்வாக இருக்கிறது. சில வேடிக்கை மனிதர்களைப் போன்று நான் கண்டிப்பாக வீழுந்து விட மாட்டேன்.
தேர்தல் நெருங்கி வருவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் ஒரு தலைவனாக இல்லாமல் சாதாரண தொண்டனாக என் கருத்தை கூறுகிறேன். ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணம் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தான். அவர்கள் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தினார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை நான்கு வருடங்கள் கொடுத்தோம் என்றார். மேலும் ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான் என்று கூறிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை