விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது அரசு உரிமம் பெற்ற கட்டிடத்திற்குள் பட்டாசுகளை தயாரிக்காமல் வெளியே வைத்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் விருதுநகர், சிவகாசி போன்ற பட்டாசு ஆலைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி விதி மீறலில் ஈடுபட்டால் பட்டாசு உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு அனுமதி இன்றி செயல்படும் பட்டாசு ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு தொழிற்சாலைகளை அனுமதி இன்றி குத்தகைக்கு மற்றும் வாடகைக்கு விடக்கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.