
சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அயோத்தி பட்டினம் ராம்நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சுரேஷ் மற்றும் இந்துமதிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதே போன்று நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இந்துமதி பக்கத்து வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றுவிட்டார்.
பின்னர் நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன் மனைவியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இந்துமதி பரிதாபமாக இறந்தார். இதற்கு இடையில் சுரேஷ் தன் மனைவியை கொலை செய்த பிறகு அந்த இடத்திலேயே இருந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரவே அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சுரேஷை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.