கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சலவைத் தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கு ஹேமலதா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் ஹேமலதாவுக்கு அதே ஊரை சேர்ந்த வீரபாபு என்பவர் உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கணவர் இதனை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது.

இதனால் ஹேமலதாவை அவருடைய கணவர் விவாகரத்து செய்த நிலையில் இரண்டு மகள்களையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து ஹேமலதா கேரளாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிலையில் வீரபாபு தனது கள்ளக்காதலியை தேடி அங்கு சென்றுள்ளார். பிறகு ஹேமலதாவை அழைத்துக் கொண்டு பாலக்காட்டில் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்த நிலையில் ஹேமலதா அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே ஹேமலதா நடத்தை மீது வீரபாபுவுக்கு சந்தேகம் வந்த நிலையில் இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டை இட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ஹேமலதா குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த வீரபாபு தான் மறைத்து வைத்திருந்த சூடு படுத்திய மின்சார அயர்ன்பாக்ஸை எடுத்து ஹேமலதாவின் முகத்தில் அழுத்தி சூடு வைத்தார். இதனால் முகம் வெந்து ஹேமலதா அலறி துடித்தார். அங்கிருந்து வீரபாபு தப்பி ஓடிவிட்ட நிலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.