உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகரன்பூர் பகுதியில் யோகேஷ் ரோகில்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவருடைய மகன் மற்றும் 11 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மனைவியும் மற்றொரு குழந்தையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட பிறகு யோகேஷ் தானாகவே போலீசாருக்கு தொடர்பு கொண்டு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யோகேஷை கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு இப்படிப்பட்ட ஒரு கொடூர சம்பவத்தை செய்ததாக அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்த யோகேஷ் இப்படி ஒரு கொடூரத்தை செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கொடுத்துள்ளனர்.