
தமிழ் சினிமாவில் வைகை புயல் என்று அடைமொழியோடு உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் வடிவேலு. இவர் திமுகவின் ஆதரவாளர். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடைக்கு மேலே நடிகர் விஜயகாந்த் பற்றி விமர்சித்தார். ஆனால் வடிவேலுவுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் தேர்தல் முடிவு அமைந்தது. அதாவது ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
அதோடு வடிவேலுவுக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாமல் நடிகர் வடிவேலு முடங்கிய நிலையில் அந்த காலகட்டத்தில் இளம் நடிகர்கள் பலர் அந்த காமெடி இடத்தை நிரப்பினர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சினிமாவில் அதிரடியாக நுழைந்து வடிவேலு படங்களில் நடித்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நடிகர் வடிவேலுவை திமுக பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. ஆனால் அவர் பின்வாங்கி விட்டார். இந்த நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வடிவேலுவை நடிகர் விஜய்க்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட வைக்க திமுக முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
அதற்கு ஏற்றார் போன்று சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடிவேலு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக திமுக தான் ஆட்சிக்கு வரும் எனவும் ஒவ்வொரு வீட்டின் மூத்த மகனாக ஸ்டாலின் இருக்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார். இதை நடிகர் விஜய்க்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்திற்கு வடிவேலுவை முன்னோட்டமாக திமுக பயன்படுத்தியதாக தெரிகிறது. மேலும் இதன் காரணமாக அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் விஜய்க்கு எதிராக வடிவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வடிவேலு சினிமாவில் நடிக்கப் போகிறாரா அல்லது அரசியலில் இறங்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.