
சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் 26 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. ஆனால் அது ஒரு நாள் கூட செயலிழந்தது கிடையாது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் மாறிமாறி செயலிழக்க என்ன காரணம். வாக்குப்பதிவு சதவீதத்தை மாற்றி மாற்றி சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடியாகத்தான் இருக்கிறது என்றார்.
அதன்பிறகு நடிகர் அஜித்துக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவர் ஒரு தைரியசாலி என்று கூறினார். அதன்பிறகு கோழைகளை எனக்கு பிடிக்காது. அஜித் ஒரு தைரியசாலி. விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார். அதன் பிறகு செய்தியாளர்கள் நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், நல்லது செய்வதற்காக இருக்கக்கூடிய களம் அரசியல் தான். அப்படிப்பட்ட களத்திற்கு அஜித்குமார் வந்தால் மிகவும் நல்லது. அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என ஜெயக்குமார் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.