
பிரபல நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று கங்கனா சண்டிகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தார். அப்போது விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் விவசாயிகளுக்கு எதிராக கங்கனா கருத்து தெரிவித்ததாக சுட்டிக்காட்டி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த தாக்குதலை கங்கனா சற்றும் எதிர்பாரவில்லை. உடனே மற்ற பாதுகாவலர்கள் கங்கனாவை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின் போது இந்த சம்பவம் நடந்தது. சோதனை முடிந்த பிறகு வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்த பெண் காவலர் என் முகத்தில் அறைந்தார்.
பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் இதனை எப்படி கையாள்வது என்பது எனக்கு கவலையாக இருக்கிறது என கங்கனா கூறியிருந்தார். பெண் காவலரின் செயலுக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் காவலரின் சகோதரர் ஷெர் சிங் விவசாயிகள் சங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். பஞ்சாப் தொழிலதிபரான சிவ்ராஜ் சிங் பெண் காவலரின் செயலை பாராட்டியுள்ளார்.
மேலும் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை சன்மானமாக கொடுக்கிறேன் என அறிவித்துள்ளார். வேறு ஒருவர் பெண் காவலரை பாராட்டி ஒரு பாடலை பாடி வெளியிட்டு இருக்கிறார். கங்கனா ராணாவத்தை அறைந்த செயலுக்காக பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால்அவர் மீது இன்னும் வழக்கு பதியவில்லை என கூறப்படுகிறது. எதிர்ப்புகள் எவ்வளவு இருந்தாலும் பெண் காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது.