மும்பை அமர்வு நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனக்கு இரவு நேரத்தில் ஒருவர் தவறான மெசேஜ் அனுப்புவதாக கூறி வழக்கு தொடர்ந்தார். அதாவது மனு கொடுத்த பெண்ணுக்கு இரவு 11:00 மணி முதல் 12 30 மணி வரையில் நீ ஒல்லியாக இருக்கிறாய், ரொம்ப புத்திசாலி மற்றும் நீ அழகாக இருக்கிறாய் போன்ற வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அதோடு எனக்கு வயது 40 ஆகிவிட்டது எனவும் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்றும் மெசேஜ் மூலம் கேட்டுள்ளார். அதோடு போட்டோக்களையும் அவர் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு தொழிலதிபராக இருக்கும் நிலையில் தன்னுடைய கணவருடன் இருக்கும் போது அப்படிப்பட்ட மெசேஜ் வருவது மிகவும் ஆபத்தானது என்று தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றம் கூறியதோடு அவருக்கு மூன்று மாத காலம் சிறை தண்டனை விதித்த நிலையில் அதனை எதிர்த்து அவர் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் இரவு நேரத்தில் பெண்ணிற்கு இதுபோன்ற மெசேஜ் அனுப்புவது குற்றம் தான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனை செல்லும் என்று கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.