மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசாய் கிழக்கு சின்ச்வாடா பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை நடு ரோட்டில் ஒரு வாலிபர் பெண்ணை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்றார். அவர் தன் கையில் பெரிய ஸ்பேனர் ஒன்றினை வைத்திருந்தார். அதை வைத்து திடீரென அந்த பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளினார். பின்னர் 15 முறை ஸ்பேனரால் தலையில் அடித்து அவரை கொலை செய்தார். இதை ஒருவர் மட்டும் தடுக்க முன் வந்த போது அவரை ஸ்பேனரை வைத்து மிரட்டியதால் அவர்கள் பின்னால் சென்றனர். மற்றவர்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த கொடூர தாக்குதலை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

அவர் என்னை ஏன் ஏமாற்றினாய் என்று கூறிக்கொண்டே அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி கொன்றார். பின்னர் ஸ்பேனரை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை கொன்றவர் ரோகித் யாதவ் என்பது தெரிய வந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் ஆர்த்தி யாதவ் என்ற பெண்ணை கொலை செய்தார். அதாவது இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆர்த்தி திடீரென ரோகித்துடன் ஆன உறவை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரத்தில் காதலியை நடுரோட்டில் அவர் அடித்துக் கொன்றது  தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.