மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில் பஷான் சர்கிள் பகுதியில், சாலையில் நடந்த ஒரு சாதாரண வாக்குவாதம், தம்பதியருக்கு அச்சுறுத்தலான அனுபவமாக மாறியது. அதாவது முகுந்த்நகர் பகுதியில் நண்பர்களுடன் இரவு உணவு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அமல்தேவ் ராமன் மற்றும் அவரது மனைவி கேதகி மீது, மதுபானம் அருந்திய ஆண்கள் குழு தாக்குதல் நடத்தியது. காரை வழிமறித்த அந்த கும்பல், ஹார்ன் அடித்ததற்காக அமல்தேவ் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

வீடியோவிலும் சாட்சிகளாலும் உறுதி செய்யப்பட்டபடி, அந்த கும்பலில் இருந்த ஆறுபேரில் ஒருவர், கேதகியை காயப்படுத்தியதோடு, மற்றவர்கள் அமல்தேவை கல்லாலும் கம்பியாலும் அடித்தனர். தாக்குதலில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, அமல்தேவ் மூக்கு முறிவு, காது கீறல் உள்ளிட்ட பல காயங்களுடன் சைஷ்ரீ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப்பின், இருவரும் கேதகியின் சகோதரருடன் சதுர்ஷுங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

தாக்குதலில் தொடர்புடைய அனில் லொந்தே (50), ராஜ் லொந்தே (20), வினாயக் காக் (55) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். “நான் என் பகுதியை பெருமையாக நினைத்த பெண்; இன்று வீட்டை விட்டு வெளியே வர பயமாக இருக்கிறது. ரோட்டில் நின்றவர்கள் வீடியோ எடுத்தார்கள் – ஆனால் ஒருவரும் நம்மை காப்பாற்றவில்லை. மனிதநேயமே இல்லையா?” என கேதகி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இச்சம்பவம் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்து வருகிறது.