சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர் பிரபா (44) என்பவருடன் சேர்ந்து கிரிஸ்ட் காலணி அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார்.

இதனை அடுத்து பிரபா கரையில் இருந்துள்ளார். சம்பத் மட்டும் கால்வாயில் குளிக்க இறங்கியுள்ளார். கால்வாயில் இறங்கிய சம்பத் வெகு நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியில் பிரபா இது குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற கணவர் வீட்டிற்கு வரவில்லை என்பதால் சம்பத்தின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்களும் அப்பகுதி முழுவதும் தேடி வந்தனர். அப்போது ஆரிக்கம்பேடு சந்திப்பு அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கால்வாயில் கிடந்த உடலை மீட்டு விசாரித்த போது அது காணாமல் போன சம்பத் என்பவரின் உடல் என தெரியவந்தது. அதன் பின் சம்பத்தின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சம்பத்தின் நண்பர் பிரபாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பருடன் குளிக்க சென்ற போலீசார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.