சென்னை மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியில் ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆண்டனி 12-ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதி தோல்வி அடைந்தார். இதனால் ஆண்டனியின் பெற்றோர் தற்போது நடைபெற உள்ள மறு தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என கூறியுள்ளனர். நேற்று காலை ஆண்டனிக்கு 12-ஆம் வகுப்புக்கான மறுத்தேர்வு இருந்தது. இதனால் பெற்றோர் அதிகாலை 3 மணிக்கு ஆண்டனியை எழுப்பி படிக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் தேர்வுக்கு முறையாக படிக்காமல் இருந்த ஆண்டனி மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் சர்வீஸ் சாலை அருகே சென்று ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு காவலாளிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆண்டனியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.