
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவில் மணிகண்டன்(47)- உமா(42) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் செங்கல் சூளையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மனோ(21) என்ற மகனும், வினோதினி(19) என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதனையடுத்து நள்ளிரவு நேரம் மணிகண்டன் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் குழவி கல்லை போட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த உமா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.