சென்னை மாவட்டம் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது சரத்தின் நண்பர் சஞ்சய் என்பவர் மது விருந்து ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் பிரபல ரவுடியான சுனில் என்பவர் பங்கேற்றார். அவர் தனது நண்பர்களுக்காக கூடுதல் மது வேண்டும் என கேட்டு சஞ்சயிடம் தகராறு செய்துள்ளார். மேலும் உனக்கும் எனக்கும் ஆரம்பத்திலிருந்து ஒத்து வரவில்லை. உன்னை போட்டு தள்ளி விடுவேன் என மிரட்டி விட்டு சென்றார்.

கடந்த 15-ஆம் தேதி சுனில் உள்பட 9 பேர் நள்ளிரவு நேரம் சரத்தின் வீட்டிற்கு சென்று சஞ்சய் எங்கே என கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த ஜன்னல்கள், கண்ணாடி கதவுகளை உடைத்து தகராறு செய்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுனில், ரத்தினம், பாலாஜி ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.