
கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியிடம் வெங்கடராஜ் தகராறு செய்து முத்தமிட்டுள்ளார்.
உடனடியாக வீட்டுக்கு சென்ற அந்த சிறுமி தந்தையிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெங்கடராஜை கைது செய்தனர். இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த அவர், அந்த சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதோடு அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டால் போக்சோ வழக்கு ரத்து ஆகிவிடும் என நம்பினார். தற்போது அந்த சிறுமி +2 முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 தேதி இரவு வெங்கடராஜ் அவரது நண்பர் உபேந்திரனுடன் (24) சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
பின் அவர் முனிராஜை எழுப்பி சிறுமியை தனக்கு திருமணம் செய்து தரும்படி கூறியுள்ளார். அதோடு வழக்கையும் வாபஸ் பெறவும் கூறினார். இதையடுத்து சிறுமியை வெங்கட்ராஜ் கடத்திச் செல்ல முயன்றார். இதை தடுத்த முனிராஜை அவர் இரும்பு ராடு மற்றும் கட்டையால் தாக்கினார். இதனால் முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின் வெங்கட்ராஜ் அந்த சிறுமையை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உபேந்திரனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வெங்கடராஜ் மற்றும் சிறுமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.