சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு சுமார் 10 கிலோ கஞ்சா இருப்பதாகவும், அதனை வேறு ஒருவருக்கு கைமாற்ற முடிவு செய்துள்ளதால் விரைந்து சென்றால் உடனடியாக பிடித்து விடலாம் என்று கூறியுள்ளார். அந்த கஞ்சாவை ஒரு பெண் வைத்துள்ளதாகவும் அவர் போலீசாரிடம் கூறிய நிலையில் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் உல்லாசமாக மது போதையில் இருந்துள்ளனர்.

அந்த இடத்தில் காவல்துறையினர் முற்றிலும் சோதனை நடத்திய போதிலும் கஞ்சா எதுவும் சிக்கவில்லை. பின்னர் நடத்திய விசாரணையில் போன் செய்தது அங்கு உல்லாசமாக இருந்த நபரின் மனைவி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மறுநாள் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் தன் கணவன் தன்னுடன் வாழாமல் கள்ள காதலியுடன் உல்லாசமாக இருப்பதாகவும் வெளியே சென்று ஊர் சுற்றுவதாகவும் அதனால் தான் இப்படிப்பட்ட ஒரு தகவலை சொன்னதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து இது போன்ற பொய் தகவல்களை இனி கூறக்கூடாது என்றனர். மேலும் அந்த பெண்ணின் கணவரையும் கள்ள காதலியையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.