
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் டி-ஷர்ட் அணிவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று அவர் கூறியதாவது, சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது ஒரு வரப் பிரசாதம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 லட்சம் பேர் வருவார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டும் தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தான் வசதிகள் செய்யப்பட்டதே தவிர பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. சாலைகளில் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைதான் மக்களுக்கு நீடித்தது.
அதன்பிறகு துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கட்சி கொடியை தலை முதல் கால் வரை, வலது முதல் இடது வரை என எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது வேஷ்டி சட்டை அணிவதுதான் நம்முடைய மரபு. ஆனால் அரசு நிகழ்ச்சிகளில் கூட உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட் தான் அணிந்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியிலும் அதே உடைதான் அவர் அணிந்தார். உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் வாங்கி தருகிறோம். அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் பேன்ட் ஷர்ட் மற்றும் வேஷ்டி சட்டை அணிய வேண்டும் என்பதுதான் மரபு. மேலும் இனிவரும் அரசின் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் டி-ஷர்ட் அணிந்தால் கண்டிப்பாக நாங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று கூறியுள்ளார்.