
தேசிய கல்விக் கொள்கையில் (NEP) இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை “இந்தி திணிப்பு” என தமிழக அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு முடக்கிவிட்டது. மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழகம் உறுதியுடன் நிலைத்திருக்கும் நிலையில், இது மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி விவகாரத்தை குறுகிய அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என குற்றம்சாட்டினார். சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்குத் தந்த நேர்காணலில், “இது அரசியல் பயனை நோக்கி நடத்தப்படும் செயல். ஆனால் இது இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது. உ.பி.யில் பல்வேறு மாநில மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அதனால் மாநிலம் சிறியதாய் போகவில்லை, மாறாக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன” என தெரிவித்தார்.
இதற்கு முன்னதாகவே யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு பதிலளித்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “எந்த மொழிக்கும் எதிராக இல்லை. ஆனால் எந்த மொழியும் திணிக்கப்படக் கூடாது என்பதே எங்களின் நிலை. இது வாக்கு வங்கி அரசியல் அல்ல, இது கண்ணியத்துக்கும், மொழி நியாயத்திற்குமான நியாயமான போராட்டம். வெறுப்பைச் செய்யும் யோகி ஆதித்யநாத் எங்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டாம்” எனக் கடுமையாகக் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.