
மதுரை மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் இன்று (ஏப்ரல் 24, 2025) நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பை கேட்ட குற்றவாளிகள் நேரடியாக நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பரபரப்பான சம்பவம் நடந்தது. மதுரை வில்லாபுரம் அருகே கருவேலங்காட்டில் போலீசார் ரகசிய தகவலின்படி சோதனை செய்தபோது, முரட்டாம்பத்திரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் மனைவி சரண்யா ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 25 கிலோ உலர்ந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, இவர்கள் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், பிரபல ரவுடியான வெள்ளை காளியின் அண்ணன் மகன் சண்முகவேல் வழங்கியதாகவும் கூறினர். இந்த வழக்கில் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, மூவருக்கும் தலா 12 ஆண்டு கடும் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பை கேட்டவுடனே ஆத்திரமடைந்த பாண்டியராஜனும் பிரசாந்தும், நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்து, கைகளில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் சொட்டியபடியே நீதிபதியை திட்டி, “நாங்கள் வெள்ளை காளியின் பசங்க. சுபாஷ் சந்திரபோஸை எதற்காக என்கவுண்டர் செய்தீர்கள்? நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்” எனக் கூறி அட்டூழியம் செய்தனர். அவர்களது மிரட்டலான பேச்சுகள், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போலீசார் உடனடியாக அவர்களை கட்டுப்படுத்தி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு சிறையில் அடைத்துள்ளனர். நீதிபதிக்கு நேரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தின் அமைதி மற்றும் நீதிமன்ற அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம், காவல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.