ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைகள் நடைபெற்றன. இதில், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்குவோம் என்று மோடி உறுதிபூண்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஒரு தொலைக்காட்சி பேட்டியில், கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் நிதி உதவிகளை வழங்கியதாக ஒப்புக்கொண்டார். “அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்காக நாங்கள் இந்த கருப்புப் பணிகளை செய்தோம். அது ஒரு பெரிய தவறு. இதனால் பாகிஸ்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். இதே பேட்டியில், பஹல்காம் தாக்குதலை இந்தியா மேடைக்காட்சி போன்று அமைத்திருக்கலாம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தியா எந்த வகையிலான பதிலடி எடுத்தாலும், அது இரு அணு சக்தி நாடுகளுக்கிடையே முழுமையான போராக மாறும் அபாயம் இருப்பதாக கவாஜா எச்சரிக்கை விடுத்தார். பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவாளராக இந்தியா வெளிநாடுகளில் வலுவாக முன்னிறுத்தி வரும் இந்த சூழலில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கூற்றுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஒத்திவைத்ததோடு, பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்களையும் ரத்து செய்துள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.