தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு மதுரை அரிடாப்பட்டி மற்றும் மேலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். இன்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அரிடாப்பட்டி மக்களை நேரில் சந்திக்க இருக்கிறார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய காரணமாக இருந்து ஏலம் விடுவதற்கும் காரணமாக இருந்தது. இருப்பினும் மத்திய அரசுதான் உடனடியாக தலையிட்டு ஏலத்தை ரத்து செய்தது.

இந்த சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான். சென்னை ஈசிஆரில் திமுக கொடி பொருத்திய காரில் இளம்பெண்களை சிலர் துரத்தும் வீடியோ காட்சி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. இதுவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்பதற்கு சாட்சி. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெண் பத்திரிகையாளரின் செல்போனில் புடுங்கி விசாரணை என்று கூறும் காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறேன்.

திமுக மீண்டும் 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று மு.க ஸ்டாலின் ஒரு பகல் கனவில் ‌ இருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஒரு நாடக கம்பெனி போல் தான் நடக்கிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது கிடையாது. மேலும் பெரம்பூரில் அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்தே அந்த வழக்கு எவ்வளவு மோசமாக நடைபெறுகிறது என்பதை நன்றாக தெரிகிறது என்று கூறினார்.