பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியதோடு அறிவாலயத்திற்கு தனியாக வருகிறேன்  முடிந்தால் திமுகவினர் அனைவரையும் மொத்தமாக இறக்குங்கள் என்று சவால் விட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதியும் தைரியம் இருந்தால் அண்ணாமலையை வர சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தற்போது உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசிய அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுயநினைவு இல்லாதவர் போல் உளறிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. ஒரு துணை முதல்வரை இப்படி ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். நாவடக்கம் அற்றவர் மற்றும் அநாகரீகமானவர் அண்ணாமலை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். செருப்பு போடாமல் நடப்பேன் என்று கூறிவிட்டு ஷூ கால்களுடன் வலம் வருகிறார். அவர் சாட்டையால் அடித்ததை பார்த்து நாடே சிரிக்கிறது. மேலும் கார்ப்பரேட் மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக பேசும் அண்ணாமலைக்கு திராவிடம் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லை என்று கூறினார்.