டெல்லியில் நேற்று 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இது கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் சிறிய அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு அதாவது 2000 ரூபாய் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு மிக்சர் மற்றும் சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12 சதவீதத்திலிருந்து 5% வரை குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியம் மீதான வரி விதிப்பை குறைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அல்லது மாநில அரசுகளுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் வருமான வரி சலுகை பெற்ற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இந்த நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.