மத்திய அரசு மேல் தட்டு மக்களுக்கானது ஏழை எளிய மக்களுக்கானது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ப. சிதம்பரம், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் சாசனம் என்பது மனுதர்மம் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து தெரிகிறது பாஜக மேல் தட்டு மக்களுக்கான கட்சி என்று. சாதி ஆதிக்கத்தையும் ஆதரிக்க கூடிய கட்சி தான் பாஜக.

கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் என்பது பாஜகவின் ஒட்டுமொத்த வேஷத்தையும் கலைத்து விட்டது. ஒரு லட்சம் கோடியை ஏழை எளிய மக்களுக்கு தரப்போகிறோம் என்று தெரிவித்துவிட்டு மேல் தட்டு மக்களுக்கு மட்டும் வழங்கியுள்ளனர். வருமான வரி செலுத்தாதவர்கள் ஏழை எளியவர்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லையா. ஒருத்தரப் மக்களுக்கே செல்வம் சேர்கின்றது. நாட்டில் யாரும் பட்டினியால் சாகவில்லை, பசியால் தான் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் இன்று இரண்டு வேளை உணவு தான் சாப்பிடுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் அதனை மோடி ஒழிக்க நினைக்கின்றார். காலப்போக்கில் இந்த திட்டத்தை ஒழிப்பது தான் பாஜகவின் நோக்கம் என்று விமர்சித்துள்ளார்.