இஸ்ரோ நிறுவனம் விண்வெளி துறையில் பல்வேறு சாதனை நிகழ்த்தி வரும் நிலையில் அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது. அடுத்த வருடம் நடக்கும் சுகன்யான் சோதனை பயணத்திற்கு சுபான்சு சுக்லா, அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், பிரசாந்த் நாயர் ஆகிய விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் மிக்க விண்வெளி வீரர்கள் குறைவு.

இதனால் விண்வெளிக்கு முதலில் யாரை அனுப்புவது என்ற சிக்கல் இருக்கிறது. முதல் முறையாக தற்போது சோதனை பயணம் செய்யப்பட இருப்பதால் விஐபிகள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களை அனுப்ப முடியாது. அந்தப் பயணம் முழுவதுமாக பாதுகாப்பானது என்று உணர்ந்த பிறகு தான் விஐபிகளை அனுப்ப முடியும் என்றார். அப்போது அவரிடம் பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சோம்நாத் பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்பினால் நான் மட்டுமல்ல மொத்த நாடே பெருமைப்படும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். மேலும் அந்தப் பயணத்தில் முழுமையான பாதுகாப்பு இருக்கிறது என்று உணர்ந்த பிறகு தான் பிரதமர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று கூறினார்.