
சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரியங்கா (27) என்பவர் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அதேபோலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவரும் ராயபுரம் தம்பு லைன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்த நிலையில் வழக்கம்போல இருவருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சேகர் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்ட நிலையில் மனவேதனை அடைந்த பிரியங்கா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சேகர் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சேகரை விசாரித்து வருகிறார்கள்.