அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போதை ஊசி செலுத்தவில்லை எனக்கூறி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக் கொள்ள மறுத்ததால் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதன் இதுவரையில் தொடர்ச்சியாக நான் போதைப் பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.

ஆனால் இப்போது வரை இந்த ஸ்டாலின் மாடல் அரசு போதை பொருளை ஒழிக்க ஆப்ரேஷன் 2ஓ, 3ஓ,4ஓ போட்டதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பதைத்தான் இப்படிப்பட்ட செய்திகள் உணர்த்துகிறது. போதை பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமாக சீரழிக்கிறது என்பதற்கு இது தான் சாட்சி. விளம்பர சூட்டிங்கில் வந்து போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என்று பேசினால் மட்டும் போதாது. போதைப் பொருள் புழக்கத்தையும் ஒழிக்க வேண்டும். மேலும் வாலிபர் கொலையில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.