விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா தங்களுடைய தோழமை கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலரும் தொடர்ந்து அவரை கண்டித்தனர். இதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனிடையே கட்சியை விட்டு நிரந்தரமாக நீங்கிய ஆதவ் அர்ஜுனா நேற்று தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

தொடர்ந்து தவெக கட்சியில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பதவியைப் பெற்ற கையோடு திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா அவரிடம் ஆசி பெற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் அரசியல் பயின்ற இடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான். இன்று அல்ல என்றைக்குமே என்னுடைய ஆசான் என்றால் அது திருமாவளவன் அண்ணன் மட்டும்தான்.

அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த வழியில் தான் நான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் பயணிப்பேன். இவரும் விஜய் அண்ணனும் இரு வேறு துருவங்கள் கிடையாது. கொள்கை ரீதியில் இருவருமே ஒரே துருவத்தில் நிற்பவர்கள் தான். இனி வரக்கூடிய காலத்தில் எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது சந்தேகம் என்றால் கூட உடனே நான் திருமாவளவன் அண்ணனிடம் தான் ஆலோசனைகள் அனைத்தையும் கேட்டு அந்த வழியில் செயல்படுவேன் என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.