பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர், தற்போது இந்தியாவில் தங்கி வாழ அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமா ஹைதர், 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு சட்ட விரோதமாக வந்து தனது காதலர் சச்சின் மீனாவை திருமணம் செய்து கொண்டார். சீமா ஹைதர் ஏற்கனவே திருமணமானவர்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், சீமா, “நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். இப்போது இந்தியாவின் மருமகளாக இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு இங்கே தங்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

சீமா, தனது திருமணத்திற்குப் பிறகு இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் தனது கணவர் சச்சின் மீனாவுடன் வாழ்ந்து வருகிறார். இருவரும் 2019ஆம் ஆண்டு ஆன்லைன் கேம் விளையாடும்போது அறிமுகமாகி காதலித்து வந்தனர்.

சீமாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறுகையில், “சீமா தற்போது பாகிஸ்தான் குடியுரிமை உடையவரல்லர். அவர் இந்திய பிரஜையான சச்சின் மீனாவை திருமணம் செய்து கொண்டு, அவருடைய குழந்தை பாரதி மீனாவுக்கு தாயாகி உள்ளார். எனவே, மத்திய அரசின் உத்தரவு அவருக்கு பொருந்தாது” என்றார்.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டு நபர்களின் வீசாக்கள் 2025 ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் இரத்துசெய்யப்படும் என்றும், மருத்துவ வீசாக்கள் மட்டும் 29 ஏப்ரல் வரை செல்லுபடியாகும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், சச்சின் மீனாவுடன் வாழ்ந்து வரும் சீமாவுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.