
தென்காசி மாவட்டம் வி கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆமோசடன் பணிபுரிந்த சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் அடிக்கடி நந்தினி செல்போனில் பேசி வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதளாக மாறியது.
இதற்கிடையே ஆமோஸ் சரியாக வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆமோஸ் அந்தோணியுடன் பழகுவதை நிறுத்துமாறு தனது மனைவியை எச்சரித்துள்ளார். இருப்பினும் நந்தினி கணவர் சொல்வதை கேட்கவில்லை.
நந்தினி தனியாக வீடு எடுத்து அந்தோணியுடன் குடும்பம் நடத்துவதற்கு திட்டமிட்டார். நேற்று மதியம் அந்தோணி ஆமோஸின் வீட்டிற்கு சென்று நந்தினியை அழைத்துள்ளார். அப்போது நான் வீட்டில் இருக்கும்போதே நீ என் மனைவியை எப்படி கூப்பிடலாம்? என கேட்டு ஆமோஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நந்தினியை அந்தோணியுடன் செல்ல விடாமல் ஆமோஸ் தடுத்துள்ளார். இதனால் கோபத்தில் அந்தோணி அரிவாளால் ஆமோசை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமோசின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி, நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.