சமீப நாட்களாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகும் செய்தி சமூக ஊடகங்களில் பரவியிருந்த நிலையில், அவர் திடீரென கைலாசாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் லைவில் வந்து விளக்கம் அளித்தார். “நான் உயிரோடு, ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்று ஏப்ரல் 3, இந்திய நேரப்படி 4.39 மணிக்கு நேரலையில் பேசுகிறேன். எனக்கே சந்தேகமாக இருக்கு – நான் உயிரோட இருக்கேனா இல்லையா என்று! நீங்களே முடிவுக்கு வாருங்கள்” என நித்தியானந்தா கூறினார்.

 

அவரது உயிரிழப்பு பற்றிய வதந்தி, அவரது சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வெளியிட்ட வீடியோவின் மூலம் பரபரப்பாக பரவியது. அதில் நித்தியானந்தா இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் பலர் நம்பிக்கையுடன் கவலையடைந்த நிலையில், நித்தியானந்தா நேரலையில் வந்து தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

 

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்மீக உலகிற்கான முதல் AI செயலியை உருவாக்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்தேன் எனவும், அதனால் நேரலையில் பேசுவதில் குறைவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். கைலாசா குறித்து கேள்வி கேட்பவர்கள் பலர் உள்ளனர், ஆனால் நான் அண்ணாமலையாரின் வழிகாட்டுதலையே பின்பற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார். பாலியல் குற்றச்சாட்டுகள், மோசடி வழக்குகள், நடிகை வீடியோ சர்ச்சை உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக 2019ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற தன்னாட்சி நாடாக அறிவித்த இடத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.