பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்  ஷேக் ஹசினா, “அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருப்பதற்கே ஒரு காரணம் உள்ளது. நிச்சயமாக அந்த நாள் வரும்; அவாமி லீக் உறுப்பினர்களை குறிவைத்தவர்களுக்கு நீதி கிடைக்கும்” என உணர்ச்சி மிக்க உறுதியுடன் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள ஹசினா, சமூக ஊடக வழியாக தனது கட்சித் தொண்டர்களின் குடும்பங்களுடன் உரையாடும் போது இந்த கருத்துகளை தெரிவித்தார். இந்த உரையாடலில், கடந்த 1975ஆம் ஆண்டு தனது குடும்பத்தை முழுவதுமாக இழந்த துயர அனுபவத்தை பகிர்ந்த ஹசினா, “நான் என் அப்பா ஷேக் முஜிபுர் ரஹ்மான், அம்மா, சகோதரர்கள் அனைவரையும் ஒரே நாளில் இழந்தேன்” என்று தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது, இடைக்கால பங்களாதேஷ் அரசின் பிரதான ஆலோசகர் முகம்மது யூனுஸை கடுமையாக விமர்சித்த ஹசினா, “அவர் மக்களை நேசிக்காதவர், உயர் வட்டியுடன் கடனளித்து வெளிநாட்டில் செழித்து வாழ்ந்தவர். அவருடைய இரட்டை முகத்தனத்தை நாம் தாமதமாக புரிந்துகொண்டோம்” என கூறினார். மேலும், பங்களாதேஷ் தற்போது பயங்கரவாத நாடாக மாறிவிட்டதாகவும், அவாமி லீக் தொண்டர்கள், போலீசார், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கிடையே BIMSTEC உச்சி மாநாட்டின் ஓரத்தில், இடைக்கால தலைவர்  எம்.டி. யூனுஸ், இந்திய பிரதமர்  நரேந்திர மோடியிடம் ஹசினாவை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.