தமிழகத்திற்கு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை நிதி வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பாஜகவினர் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் நிலையில் அரசு பள்ளிகளில் மட்டும் எதற்காக கடைபிடிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குறிப்பாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்தும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, சீமான் மற்றும் விஜய் ஆகியோரது வீட்டு பிள்ளைகள் மும்மொழி கொள்கையை படிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அப்படி இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் மும்மொழி கொள்கையை படிக்கும் போது எதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் படிக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் மும்மொளிக் கொள்கையை எதிர்க்கும் திருமாவளவன் மீது தற்போது அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்து ஒரு எக்ஸ் தள பதிவினை வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாக குழு தலைவராக திருமாவளவன் இருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.