
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ‘வடக்கு பெவிலியன் ஸ்டாண்டில்’ இருந்த முன்னாள் இந்திய அணித் தலைவர் முகமது அசாருதீனின் பெயரை நீக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைதீர்ப்பாளர் மற்றும் நெறிமுறை அலுவலராக உள்ள நீதிபதி வி.ஈஸ்வரய்யா உத்தரவிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கு எதிராக தனது மௌனத்தை முறியடித்த அசார், இது விளையாட்டுக்கே ஒரு அவமரியாதை என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், “சில நேரங்களில் கிரிக்கெட் விளையாடியதையே நினைத்து வருத்தப்படுகிறேன்,” என எமோஷனலாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு காரணமாக, “நலன் முரண்பாடு” குறித்த புகார் இருந்ததாகவும், அதனடிப்படையில் அசாருதீனின் பெயர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த போது தனது பெயரால் ஸ்டாண்ட் பெயரிடப்படுவது தவறு என லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப் என்பவர்கள் மனு அளித்துள்ளனர். அதில், அந்த ஸ்டாண்டிற்கு ஏற்கனவே இருந்த வி.வி.எஸ்.லக்ஷ்மணின் பெயர் வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அசாருதீன் கூறும்போது, “இந்த அநியாயத்தை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பேன். இது வெறும் எனக்கு எதிரானது மட்டும் அல்ல, கிரிக்கெட்டின் முழு மரியாதைக்கும் கேடு ஏற்படுத்தும் செயல். BCCI தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனவும் கேட்டுக்கொண்டார். HCA அமைப்பில் இருந்தபோது ஊழலை எதிர்த்து உரிமை கோரியதற்காகவே தனக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும் இதற்கு முன்பாக 17 வருடங்கள் தான் கிரிக்கெட் விளையாடிய நிலையில் 10 வருடங்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளேன் எனவும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா என்றும் அசாருதீன் வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.