கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் மேத்யூ(51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குறுந்தகவல் வந்தது.

இதனால் மேத்யூ அதில் இருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி மேத்யூ 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர் முதலீடு செய்த செயலியில் இருந்து பணத்தை வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மேத்யூ காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமார், குமரேசன், நித்யா ஆகிய 3 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுவரை 3 பேரும் இணைந்து 90 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.