
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சலேம்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடைபெற்றது . இந்த ராமாயண நாடகத்தை பார்ப்பதற்காக சந்த் (48) நபர் சென்றுள்ளார். அவர் நாற்காலியில் அமர்ந்து இராமாயண நாடகத்தை பார்த்துள்ளார். அப்போது அவர் தலித் என்பதால் அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறையினரை ஏவி அவரை நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்டு அடிக்குமாறு கூறினர்.
அதன்படி காவல்துறையினர் அவரை சேரிலிருந்து கீழே தள்ளி கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து ஜாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தி அடித்து மிதித்தனர். பின்னர் சந்த் அழுது கொண்டே அங்கிருந்தவர்களிடம் நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்ட நிலையில் அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் தன்னுடைய மனைவி ராம்நதியிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறினார். இதைத்தொடர்ந்து மறுநாள் கடந்த திங்கள்கிழமை திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, சந்த் மது போதையில் மேடையில் வந்து அமர்ந்ததாகவும், அவரை அப்புறப்படுத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் போலீசார் உதவியை நாடிய நிலையில் போலீசார் அவரை அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருக்கும் நிலையில் விவசாய வேலை செய்து அவர்களை காப்பாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.