தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கள்ளக்குறிச்சிக்கு சென்று கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தவெக கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வருகின்ற 22ஆம் தேதி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வரும் நிலையில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அவர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தளபதி ‌ விஜய் உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று உதவுமாறு கூறியுள்ளார். எனவே தலைவரின் உத்தரவின் படி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் இந்த உதவிகளை உடனடியாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.