தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். விஜய் கட்சியின் பொதுச்செயலாளராக அவருடைய ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர்.

சமீபத்தில் விஜய் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில விஷமிகள் இதுபோன்று போஸ்டர் ஒட்டியுள்ளதாகவும் இதனை யாரும் பெரிது படுத்த வேண்டாம் எனவும் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி தற்போது சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்திப்பில் அவர் கூறியதாவது, விஜயுடன் இருக்கும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர் யார் தெரியுமா.? அவர் எவ்வளவு காலமாக அமித்ஷாவுடன் தொடர்பில் இருக்கிறார் தெரியுமா.? அவரை இப்போது பொதுசெயலாளராக வைத்திருந்தால் அந்த கட்சி எப்படி பொதுவாக இருக்கும். ஏற்கனவே வால்போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்கள் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என்று. இதுதான் பிஜேபியின் அஜெண்டா. விஜய் கட்சி ஆரம்பித்த நிலையில் நாளை முதல்வர் புஸ்ஸி ஆனந்த்துதான் என்று சொல்லிவிட்டால் நீங்களும் நானும் என்ன செய்ய முடியும்.?

ஒன்றிய பாஜக அரசு சொல்லி தான் விஜய் கட்சியே தொடங்கியுள்ளார். ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுவதாக சொல்லிவிட்டு வெறும் 80 கோடி மட்டும் தான் வருமான வரி செலுத்துகிறார். மீதி உள்ள 220 கோடி காக ஒன்றிய அரசின் வருமானவரித்துறை விஜய் வீட்டுக்கு ரெய்டு செல்லுமா? அப்படி சென்றால் விஜய் பாஜக அரசு சொல்லி கட்சி தொடங்கவில்லை என்று மக்களும் நாங்களும் நம்புவோம் என்றார். மேலும் இதற்கும் முன்பு ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் அவருக்கு பதிலாக விஜயை வைத்து மத்திய பாஜக அரசு கட்சி ஆரம்பித்துள்ளது என்று சந்தேகமாக இருப்பதாக முன்னதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.