திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜபருல்லா தீபன் என்பவரிடம் 22.50 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி கொடுக்காததால் ஜபருல்லாவுக்கும் தீபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபன் தனது நண்பர்களுடன் இணைந்து ஜபருல்லாவை காரில் கடத்தி சென்றார்.

அதன் பிறகு போதை பொருளை கொடுத்து நிர்வாணமாக நிற்க வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் ஜபருல்லாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீபன், வீட்டு உரிமையாளர் அபிஷேக் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.